புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், மதுரை மாவட்டம்.
2024-25 கல்வி ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் உதவி பெறும் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.
அனைத்து குடியிருப்புகளிலும், 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு வழங்கும் நோக்கோடு, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு, மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட எழுத்தறிவு முனைய ஆணையத்தின் தலைவருமான . சௌ. சங்கீதா வழிகாட்டலில் செயல்படுத்தப்படுகிறது. புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தொடக்கவிழாவில், பயனாளிகளுக்கு சிலேட், புத்தகம் மற்றும் கற்றல் உபகரணப்பொருள்கள் அமைச்சர்ரால் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டில் எழுத்தறிவு மையங்களில் சேர்ந்து, பயின்று அடிப்படை எழுத்தறிவு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன.
மேலும் விழாவின்போது 2023-2024 கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் எழுத்தறிவு மையங்களை சிறப்புடன் செயல்படுத்திய தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப்பயிற்றுநர்கள் ஆகியோருக்கு பதக்கங்களும், சார்ந்த பள்ளிகளுக்கு கேடயங்களும் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சௌ. சங்கீதா, கூடுதல் ஆட்சியர் மோனிகா ரானா மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா ஆகியோரால் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தின் கிழக்கு ஒன்றியம் கொடிக்குளம், மதுரை மேற்கு ஒன்றியம், ஆனையூர், கொட்டாம்பட்டி ஒன்றியம், எஸ் மலம்பட்டி, திருமங்கலம் பிகேஎன் ஆரம்பப்பள்ளி, டி.கல்லுப்பட்டி ஒன்றியம், எம்.சுப்பலாபுரம், உசிலம்பட்டி ஒன்றியம் கொங்கப்பட்டி, அலங்காநல்லூர் ஒன்றியம், அழகாபுரி ஆகிய எழுத்தறிவு மையங்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மதுரை மேற்கு ஒன்றியத்தில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வட்டாரக்கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர் அவர்களுக்கு பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெறச் செய்யும் நோக்கில் 2024-2025 கல்வியாண்டில் 24250 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் அடிப்படை வாழ்வியல்திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்களுக்கான வகுப்பு 15.07.2024 அன்று கல்வி வளர்ச்சி நாளில் கற்போருக்கு குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே எழுத்தறிவு மையங்கள் தொடங்கப்படுகின்றன. இவர்களுக்கு கற்பிக்க 2041 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். தொடர்ந்து எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கணக்கிடப்பட்டு நவம்பர் மாதம் தொடங்கவுள்ள 2 ஆம் கட்ட வகுப்புகளில் சேர்க்கப்பட்டு எழுத்தறிவு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கடந்த இரு ஆண்டுகளில் 35,666 பேருக்கு கல்வி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் மதுரை மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், மற்றும் வட்டாரகல்வி அலுவலர்கள் ஆஷா. ஜெசிந்தா அன்புமொழி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment