டாக்டர் கலைஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம்இ அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என, அவர் செயல்படுத்திய திட்டங்களின் பட்டியல் மிக நீண்ட பட்டியலாகும்.
அவர் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், பெண்கள் நலனை கருத்திற்கொண்டு மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உரிமைத்தொகை பெண்கள் வாழ்க்கையில் பெரிதாக அப்படி என்ன மாற்றத்தை நிகழ்த்தி விடும் என பலர் கேட்கிறார்கள். அரசின் சார்பாக மகளிரின் கைகளுக்கு நேரடியாக வந்து சேருகின்ற இந்த 1000 ரூபாய், பெண்கள் தங்களின் சிறு தேவைகளுக்கும் பிறர் உதவியை எதிர்பாராமல் சுயமாக செயல்படும் தலைநிமிர்வைத் தருகிறது.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 11767, நகரப் பகுதியில், 5605 சுயஉதவிக் குழுக்கள் என, மொத்தம் 17372 சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 2023 – 2024-ஆம் நிதியாண்டிற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 980 கோடி கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. பெண்களை உயர்கல்வி படிக்க வைத்தல் , அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், சுயதொழில் தொடங்க கடன் உதவி வழங்குதல், புதிய தொழில்களைச் செய்ய வைத்தல் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெறுதல் எனப் பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
இவ்விழாவின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ர.த.சாலினி , சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment