மகாத்மா யோகா மையத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மதுரை தல்லாகுளத்தில் இயங்கி வரும் மகாத்மா யோகா மையத்தின் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் கடந்த 15 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடமும் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கான 30 விதமான உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்த வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர் பேசுகையில் தீபாவளி என்பது வெளிச்சத்தின் பண்டிகை. இந்த வெளிச்சம் வெறும் விளக்குகளால் மட்டும் ஏற்படுவதில்லை. மனிதநேயம், அன்பு, பகிர்வு போன்ற உணர்வுகளும் நம் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கின்றன. இன்று நாம் இங்கு கூடியிருப்பது அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். இங்கே வந்திருக்க கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இந்த தீபாவளி நலத்திட்ட பரிசுப் பொருட்கள் அவர்களின் வாழ்வில் ஒரு புதிய ஒளியை ஏற்றி வைக்கும். அவர்களுக்கு உதவுவது என்பது வெறும் தானம் அல்ல. அது அவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தும்.
பின்னர், வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் அளிக்கப்பட்ட பின் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் சிவக்குமார் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோரின் தலைமையில் பாலாஜி, முத்து, பழனி முருகன், செல்வம், லோகநாதன் உள்ளிட்ட யோகா மைய உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பழனியாண்டி நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment