மதுரையில் புதுவித மோசடியில் வடமாநிலத்தை சேர்ந்த நபரின் முயற்சி அரங்கேறியது - வியாபாரிகள் கவனமாக இருக்க வேண்டுகோள்
மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டயர் விற்பனை ஷோரூமில் பணியாற்றும் மேலாளருக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அலைபேசியில் தொடர்புகொண்டார். 'காருக்கு டயர் மாற்ற எவ்வளவு ஆகும்' என விசாரித்தவர், அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்துவதாக கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டது போல் அவருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியபின், சில நிமிடங்களில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், 'ஒரு ரூபாய் வந்துவிட்டதா' என கேட்டார். 'வந்துவிட்டது' என ஊழியர் கூற, 'டயர் கட்டணம் ரூ.15200 அனுப்புகிறேன்' என்றார். ஆனால் ரூ.20,200 வரவு வைக்கப்பட்டதாக பேசிய அலைபேசி எண் மூலமே எஸ்.எம்.எஸ்., வந்தது.
சில நிமிடங்களில் அந்த நபர், கடை மேலாளரை தொடர்பு கொண்டு, 'கூடுதலாக ரூ.5 ஆயிரத்தை அனுப்பிவிட்டேன். திருப்பி அனுப்ப முடியுமா' எனக்கேட்டார். தனது கியூ.ஆர். கோடு ஒன்றையும் அனுப்பினார். சுதாரித்துக்கொண்ட ஊழியர் கடைசி வரை அந்த நபருக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
குறிப்பாக -தற்போதுள்ள டிஜிட்டல் காலத்தில் எஸ்.எம்.எஸ்., லிங்க் அனுப்பி அதன் மூலம் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது போல், கூடுதல் தொகை அனுப்பிவிட்டதாக கூறி கியூ.ஆர். கோடு அனுப்புகின்றனர்.
அதை ஸ்கேன் செய்யும்போது ஜி பே அல்லது போன் பே மூலமாக வங்கி கணக்கில் இருந்து மோசடி நபரின் கணக்கிற்கு பணம் செல்லும். அதை பயன்படுத்தி மொத்த பணத்தையும் மோசடி நபர் சுருட்டி விடுவார்.
இதுபோல் மோசடி குறித்து பொதுமக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தகவல் கொடுத்தால் இதுபோன்ற தொடர் மோசடிகளை தவிர்க்கலாம் என வணிகர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment