கூட கோயில் அருகே பழமையான அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 20 August 2024

கூட கோயில் அருகே பழமையான அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு

 


கூட கோயில் அருகே பழமையான அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு.

  
மதுரை  நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவர்களான தர்மராஜா, தேன்மொழி, ஓம் பிரகாஷ் மற்றும் கல்லூரியின் உதவி பேராசிரியர்களான முனைவர். தாமரைக்கண்ணன், முனைவர். மாரீஸ்வரன், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழு கூடக்கோவிலில் உள்ள சிவன் கோயிலில் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். அப்பொழுது மிகவும் பழமையான சிற்பம் ஒன்றை பார்த்து ஆய்வு செய்த போது, அது மிகவும் பழமையான முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது என்பதை கண்டறிந்தனர்.
     
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு மதமும் மிகத் தீவிரமாக நாட்டில் பரவும் பொழுது அதற்கேற்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டு வழிபாடு செய்வது நம் மரபாகும். அதுபோலத்தான் ஆசீவகம் எனும் ஐயனார் வழிபாடும் தீவிரமாக நமது தமிழகத்தில் பரவிய பொழுது அய்யனாருக்கு சிற்பம் எடுத்து வழிபடும் வழக்கம் நம் மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. நாளடைவில் ஆசிவகம் மெல்ல மெல்ல மறைந்து அய்யனார் வழிபாடானது ஊரின் காவல் தெய்வம் என்னும் கோட்பாடுக்குள் அடங்கியது. பெரும்பாலும் கிராமத்தில் அய்யனாருக்கு ஏரிக்கரை அல்லது கண்மாயின் கரையில் தான் சிற்பங்கள் அல்லது கோவில்கள் அமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இங்கு காணப்படும் அய்யனார் சிற்பமானது உயரம்  மூன்றரை அடியாகவும் , அகலம் இரண்டரையடியாகவும் காணப்படுகிறது . தலை மகுடம் விரிந்து அழகான ஜடா பாரமாகவும் ,காதுகள் இரண்டிலும் பத்திர குண்டலமும் , கழுத்தில் ஆபரணங்களும் மார்பில் முப்புரி நூலும் காணப்படுகிறது . வலது இடுப்பில் குறுவாளும், யோகப்பட்டையானது இடுப்பில் இருந்து இடது காலினை இணைக்கும் விதமாக வடிக்கப்பட்டுள்ளது. வலது காலை மடித்தும் இடது காலை உட்குதி ஆசனத்தில் மிக அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையை இடது முழங்காலின் மீது தொங்கவிட்டபடியும், வலது கையில் திருவோடு அல்லது கபாலத்தை ஏந்தியவாறு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாசுபத சைவ மதத்தில் இது போல் இருந்தால் திருவோடு அல்லது கபாலம் என்றும்,  வைதீக மதத்தில் இதை அமிர்த கலசம் என்றும் குறிப்பிடுகின்றனர். மிகவும் அபூர்வ அமைப்புடைய இது போன்ற சிறப்பானது விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செந்நிலை குடியிலும், கொல்லிமலையிலும் காணப்படுகிறது .இந்த சிறப்பு வாய்ந்த சிற்பமானது ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கூறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad