மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய வாடகைதாரர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து; விசாரணை முடிவில் ஐகோர்ட்டு உத்தரவு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 3 April 2024

மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய வாடகைதாரர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து; விசாரணை முடிவில் ஐகோர்ட்டு உத்தரவு.


மதுரை,  திருமங்கலம் பேருந்து நிலைய கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது. அதை இடிக்க தேவையில்லை என்றும், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், சதீஷ் உள்ளிட்ட பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது மக்கள் தொகையும், வாகனங்களும் பலமடங்கு அதிகரித்து விட்டன. இதனால் வேங்கட சமுத்திரம் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்து, சுமார் ரூ.22 கோடி மதிப்பிடப்பட்டது. பின்னர் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

அந்த பணிகள் தொடங்க இருந்த நேரத்தில், இப்போது திருமங்கலம் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, அங்கேயே புதிய பஸ் நிலையம் கட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் உள்ள குத்தகை மற்றும் வாடகைதாரர்களை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பஸ் நிலைய கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். அரசாணையின் படி, வேங்கட சமுத்திரம் கிராமத்தில் புதிய பஸ் நிலையத்தை கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை திருமங்கலம் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 110 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 14 பேர் இறந்துள்ளனர். 133 பேர் காயம் அடைந்தனர் என கூறப்பட்டு இருந்தது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு இதில் கோர்ட்டு தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.


பிறப்பித்த உத்தரவு வருமாறு:- நெல்லை அரசு பொறியியல் வேங்கடசமுத்திரம் பகுதி, பஸ் நிலையம் அமைக்க போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. அப்படி இருக்கும் போது, அந்த இடம் சம்பந்த மாக எதன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட் டது என தெரியவில்லை. திருச்சி என்.ஐ.டி. தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையின் படி, திருமங்கலம் பஸ் நிலையமோ கட்டிடம் நல்ல நிலையில் இருக்கிறது. அங்கு ஏற்கனவே உள்ள கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டுவது எந்த பலனையும் தராது. புதிய கட்டிடம் கட்டுவது. பொதுமக்களின் பணத்தை விரையம் செய்வதாக அமையும்.


எனவே திருமங்கலம் நகராட்சி பஸ்நிலையத்தை இடிப்பது தொடர்பான நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு திருமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்தை அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad