கோயில் அருகே கட்சி கொடி மரங்கள் அகற்றப்படுமா? - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 2 March 2024

கோயில் அருகே கட்சி கொடி மரங்கள் அகற்றப்படுமா?


மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. 

இந்த வார்டுகளில், சுமார் முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இட நெருக்கடி காரணமாக சோழவந்தானின் புறநகர் பகுதிகளில் விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சோழவந்தானின் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு களால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமப்படுகின்றன. 


குறிப்பாக, பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகளால், நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று  சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி  கொடிக்கம்பங்களை அமைத்து வைத்திருப்பதால் பொதுமக்களுக்கும் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்களுக்கும் பல்வேறு  இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அருகில் கொடி கம்பங்கள் இருப்பதால், குடிநீரை உபயோகப்படுத்துவதற்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 


இன்னும் சில தினங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் மூன்று மாத கொடியேற்ற விழா நடைபெற்று அதனைத் தொடர்ந்து, வைகாசி திருவிழா தொடங்க உள்ள நிலையில், இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad