10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?" - உயர்நீதிமன்றம் கேள்வி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 27 February 2024

10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?" - உயர்நீதிமன்றம் கேள்வி.


மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணையின்போது, "விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.



மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்,‛‛மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கட்டப்படும் கட்டடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 1997ல் அரசாணை வெளியிட்டது.


அதன்படி கோயில் சுவரில் இருந்து கோயிலை சுற்றியுள்ள கட்டடங்களின் உயர வரம்பாக 9 மீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மீறி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு மேல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், ‛‛மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என வாதிட்டார்.


இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்,‛‛ மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிபெறாமல் விதிமீறல் கட்டடங்களை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்களா?. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பணியாகும். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உள்ளனர்.


விதிமீறல் கட்டடங்கள் மீது தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஏப்ரல் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad