கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட வேண்டும் மாணவ.மாணவிகள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 22 December 2023

கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட வேண்டும் மாணவ.மாணவிகள் கோரிக்கை.


மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அருகில் முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்த பள்ளிகளில், சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு, போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால், மிகவும் சிரமப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். 

நேற்று மாலை நாலு மணி அளவில் பள்ளி நேரம் முடிந்து பேருந்து நிலையத்திற்கு வந்த கருப்பட்டி ,இரும்பாடி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பின்னர் வந்த பேருந்தில் ஒரே நேரத்தில் அனைவரும் ஏறியதால், பஸ் முழுவதும் மாணவ மாணவிகள் நிரம்பி மாணவர்கள் பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கிச்செல்லும்  அவல நிலை ஏற்பட்டது. இந்த பகுதி மாணவ மாணவிகள் தொடர்ந்து கூடுதல் பஸ் கேட்டு கோரிக்கை வைத்துள்ள நிலையில், போக்குவரத்து துறையும் அரசும் இதுவரை செவி சாய்க்காததால் ஆபத்தான நிலையில் மாணவ மாணவிகள் பயணம் செய்யக்கூடிய துர்பாக்கிய நிலை உள்ளது. ஆகையால், மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக  கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டு கொண்டுள்ளனர்.

சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் இருந்தும், அதை இயக்கக் கூடிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பற்றாக்குறையால், பல வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை அண்ணா நிலையத்திலிருந்து, சோழவந்தானுக்கு உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரித்த போது, சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனையில், போதிய அளவு நடத்துனர் மற்றும் ஓட்டுநர் போதியளவு இல்லாததால், பஸ்கள் இயக்க தாமதம் ஏற்படுவதாக சிலர் தெரிவித்தனர். 


ஆகவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மதுரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர், போதியளவு டிரைவர் மற்றும் கண்டக்டரை நியமித்து, சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad