சோழவந்தான் அருகே குரங்குகள் தொல்லை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 22 November 2023

சோழவந்தான் அருகே குரங்குகள் தொல்லை.


சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில், குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத வனத்துறை உள்ளதாக பொது மக்கள் குறை கூறுகின்றனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளி பள்ளம் கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசத்தால், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடமிருந்து உணவுப் பொருட்களை பறித்து செல்வதும் தகர சீட் போட்டுள்ள வீடுகளின் மேல் ஏறி குதித்து அட்டகாசம் செய்வதும்,  தனியாக  வயதானவர்கள் உள்ள வீடுகளுக்குள் சென்று அச்சுறுத்துவதுமாக குரங்குகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிரண்டு குரங்குகள் இருந்த நிலையில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இதுகுறித்து, சோழவந்தான்  வனச்சரக அலுவலர்களுக்கும் மதுரை மாவட்ட வனச்சரக அலுவலர்களுக்கும் புகார் மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


மேலும் ,இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியதின் பேரில், அவர்கள் அளித்த பதில் மனுவில் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் குரங்குகள் தொல்லைகள் இருப்பதாகவும், இதுகுறித்து சோழவந்தான் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் வந்து முறையாக கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் அனுப்பி உள்ளது சமூக ஆர்வலர்களிடையே நகைப்பை உண்டாக்கி உள்ளது. வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை இருப்பதாக அனுப்பிய புகார் கடிதத்திற்கு செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் குரங்கு தொல்லை இருப்பது போல் பதில் கடிதம் அனுப்பி இருக்கும் அதிகாரிகள் செயலால் பொதுமக்கள் விரக்தியின் எல்லைக்கு சென்றுள்ளனர். ஆகையால், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்  உரிய முறையில் விசாரித்து குரங்குகளிடமிருந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad