சோழவந்தான் பகுதிக்கு முறையான பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 30 November 2023

சோழவந்தான் பகுதிக்கு முறையான பேருந்து வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.


மதுரை அருகே, சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள20 கிராமங்களில், சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கே அரசு பஸ் டிப்போ செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 60 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்கள், சோழவந்தான் சுற்றியுள்ள கிராமத்திற்கும் மதுரை பெரியார் நிலையம்,  அண்ணா நிலையம்,  எம் ஜி ஆர் பேருந்துநிலையம், திருமங்கலம் ஆகிய ஊர்களுக்கு சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.


ஆனால், இந்த பஸ்கள் முறையாக குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை, அதுமட்டுமல்லாது, வேலைக்காரிக்கு பிள்ளை மேல் சாக்கு என்பதுபோல, அரசு பஸ் டிப்போ அதிகாரிகள் சோழவந்தான் பஸ் நிலையம் திறக்கப்படவில்லை என்ற சாக்குப் போக்கை வைத்து அரசு பஸ்களை முறையாக குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை, அப்படி இயக்கப்படும் பஸ்களும் எங்கு நிற்கிறது என்று தெரியாமல் பயணிகள் அலைக்களிக்கப்படுகின்றனர்.


இதனால், பொதுமக்கள் பல அவதிக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அரசு பஸ்கள் அனைத்தும் மற்றும் தனியார் பஸ்களும் சோழவந்தானில் மார்க்கெட்ரோடு வழியாக பஸ் நிலையம் சென்று அங்கிருந்து செல்லக்கூடிய ஊர்களுக்கு வட்டப் பிள்ளையார் கோவில் வழியாக செல்ல வேண்டும். அதேபோல்,மதுரை செல்லக்கூடிய பஸ்கள் வட்ட பிள்ளையார் கோவில் வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிபஸ் நிறுத்தம், ஜெனகைமாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம், வேப்பமர ஸ்டாப் பஸ் நிறுத்தங்களின் வழியாக  இயக்கப்பட வேண்டும்.


சோழவந்தான் பஸ் நிலையத்தில் பஸ்கள் வராததால், பஸ் எங்கு நிற்கிறது என்று பொதுமக்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. ஏதோ அரசு பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக நினைத்து அரசு பஸ் டிப்போ விரிவாக்கம் செய்தது. இதனால், செக்கானூரணியில் அரசு பஸ் டிப்போ ஏற்படுத்தினார்கள். இதனால், சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்வதற்கும், திருமங்கலத்தில் இருந்து சோழவந்தானிற்கு வருவதற்கும் ஏற்கனவே, அறிவித்த பஸ்கள் கால அட்டவணைப்படி பஸ்கள் இயக்கப்படுவதில்லை.


பெரும்பாலும் சோழவந்தான் - செக்கானூரணி என்றும், திருமங்கலம்- செக்கானூரணி என்றும் பல அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தானுக்கு நேரடியாக வர முடியாமல், சோழவந்தானிலிருந்து, திருமங்கலத்துக்கு நேரடியாக செல்ல முடியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். 


இதனால், நேர விரையமும், பணவரயமும், பாதுகாப்பு குறைபாடும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர், நேரடியாக  சோழவந்தான் மற்றும் செக்கானூரணி அரசு பஸ் டிப்போக்களில் இருந்து இயங்கக்கூடிய  பஸ்கள் முறையாக குறித்த நேரத்தில் இயக்கப்படுகிறதா? பயணிகளுக்கு வசதி உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.


இது மட்டும் அல்லாது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோழவந்தான் வழியாக அனுமதி பெற்று மாற்று வழியாக செல்லக்கூடிய தனியார்  பஸ்களை  தடுக்க வேண்டும். சோழவந்தானிலிருந்து, ஏற்கனவே சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்துகள் திருப்பரங்குன்றம், பல்கலைக்கழகம், செம்பட்டி, வாடிப்பட்டி- திருமங்கலம் போன்ற அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். மழைக்காலங்களில், அரசு பஸ்களில் பயணிகள் குடை பிடித்து செல்லக்கூடிய அவல நிலை உள்ளது.

 

இது மட்டுமல்லாது, அரசு பஸ் எந்த நேரம் எந்த இடத்தில் நிற்கும் என்று பயத்துடன் பயணிகள் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 50,000 மக்களுக்கு முறையான, குறித்த நேரத்தில் பஸ் இயக்கப்பட வேண்டும். இந்த வழியாக அனுமதி பெற்று மாற்று வழியில் செல்லக்கூடிய பஸ்கள்  சோழவந்தான் வந்து செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.


ஏற்கனவே, டீசல் தட்டுப்பாடு காரணமாக  நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கவும், கூடுதலான பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad