பாஜவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் - பாஜக மாநில செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேட்டி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 23 June 2023

பாஜவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் - பாஜக மாநில செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேட்டி


எதிர்க்கட்சி கூட்டணியில் ,பிரதமர் வேட்பாளர் யார் என்பது கேள்விக்குறிதான் ஆனால், பாஜவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது மக்களுக்கு தெரியும் பாஜக மாநில செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பேட்டி அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் மதுரை பிபிகுளம் பகுதியில், உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்ப்பை உருவாக்க வேண்டும் என, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி உள்ளன. 


பாஜ வெற்றியை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிதிஷ்குமார் அழைப்பினை ஏற்று கூடி உள்ளனர். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பதற்காக பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் என்பது சாத்தியமில்லாதது.


சட்டமன்றத் தேர்தலுக்கும், பார்லிமென்ட் தேர்தலுக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. அதே, கர்நாடகாவில், பார்லிமென்ட் தேர்தலில் பாஜகவுக்கு தான் அதிக இடங்கள் கிடைக்கும். ஏற்கனவே, நடந்த 2006, 2014, 2019 தேர்தலில் பாஜ தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் மத்தியில் பாஜ ஆட்சிதான் அமையும். ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர் மாநிலங்களின் 30 ஆண்டுகள் வரலாற்றை பார்த்தால் பாஜவிற்கு தான் அதிக இடங்கள் கிடைத்துள்ளது என்பது புரியும்.


எதிர்க்கட்சிகள் பாஜவை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடத்தும் இந்த கூட்டத்தில் 13 கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இருந்தாலும் இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது கேள்விக்குறிதான். ஆனால், பாஜவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். மோடி தான் பிரதமர் என்பதில் பொதுமக்களிடம் எந்த குழப்பமும் இல்லை.


கவர்னருக்கு எதிராக மதிமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலினால் அதில் கையெழுத்து போட முடியாது. அப்படி போட்டாள் அது அரசியல் அமைப்பு ரீதியாக அவருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும். தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தான் உள்ளன. புதிய கூட்டணியால் ஸ்டாலினுக்கு எந்த லாபமும் இல்லை.


பார்லிமென்ட் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கேட்கலாம். திமுக தலைவராக இருந்த கருணாநிதி இலங்கை தமிழர் பிரச்சனையின் போது காங்கிரஸ் கட்சியிடம் எதுவும் பேசவில்லை. அதே நேரம் 2009 தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வீல்சேரில் அமர்ந்து டெல்லி சென்று எத்தனை அமைச்சர்கள் பதவி தருவீர்கள், அதிகமாக கல்லா கட்டும் அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று மன்மோகன் சிங்கிடம் மிரட்டி பறித்தார். அதே போல் தான் ஸ்டாலினும் செய்வார். 


பாஜா ஆட்சிக்கு வராமல் வேறு கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால் குழம்பிய குட்டைக்குள் எப்படி மீன் பிடிக்கலாம் என்ற ஒரே எண்ணத்தில் தான் இந்த எதிர்கட்சி கூட்டணிகள் கூட்டம் நடத்துகின்றன. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. எந்த மாநிலத்தில் இந்த கூட்டணிக்கு சாத்தியம் உள்ளது. மம்தா பானர்ஜியும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்தில் மம்தா பானர்ஜிக்கோ, மேற்கு வங்கத்தில் ஸ்டாலினுக்கோ ஒரு ஓட்டு கூட கிடையாது. அப்படி இருக்கும்போது இந்த கூட்டணி எப்படி வெற்றி பெறும்.


முந்தைய காலகட்டத்தில் காங்கிரஸ் பலமாக இருந்தபோது 77ல் ஜனதாவும், 89ல் விபி.சிங் தலைமையிலும், 96ல் ஐக்கிய முன்னணி பெயரில் தேவகவுடா போன்றோர் இணைந்து கூட்டணி அமைத்தனர். இவை அனைத்துமே தோல்வியை தான் தழுவின. அதே நிலைதான் தற்போதைய கூட்டணிக்கும் ஏற்படும்.


காங்கிரஸ் தன்னை தானே அழித்துக் கொண்ட கட்சி. இந்த கூட்டணியில் இணைந்திருக்கிற லல்லு பிரசாத் யாதவ், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பாவார், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆகியவைதான் கைகோர்த்துள்ளனர். இவர்கள் எல்லாம் மக்களால் ஏற்கனவே விரட்டியடிக்கப்பட்டவர்கள். தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்தக் கூட்டணியால் பாஜகவுக்கு தான் வலு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad