தொடர்ந்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- இந்தியாவில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகரில் வைகை ஆற்றின் வடக்கும் மற்றும் தெற்கு கரையில் ஆற்றங்கரை சாலை அமைக்கப்பட்டது.
”திண்டுக்கல் சாலையில் இருந்து குருவிக்காரன் சாலை வரை கி.மீ 0/0 – 5/0 வரை வைகை வடக்கு ஆற்றங்கரை சாலை அமைக்கும்” பணி நிறைவடைந்துள்ளது. கோரிப்பாளையத்தில் இருந்து சாலையைப் பயன்படுத்துவோர் வடக்கு கரை நான்கு வழிச் சாலைக்குள் நுழைவதற்கு வசதியாக செல்லூர் மேம்பாலத்தில் தத்தனேரி பக்கத்திலிருந்து கூடுதல் இணைப்பு பாலம் வைகை வடக்குக் கரை சாலையை இணைப்பதற்காக அமைப்படுகிறது. தமிழக அரசால் இப்பணிக்கு ரூ.950.00 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த கூடுதல் இணைப்பு பாலம் 11 கண்களுடன் மொத்த நீளம் 320.00 மீ மற்றும் 7.50 மீ அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணி 06.07.2022 தொடங்கப்பட்டு, தற்போது 11 தூண்கள் (Piers) மற்றும் 1 மேற்தள அடுக்கு (Deck slab) முடிவுற்றுள்ளது. பணிகள் முழுவதும் ஜுன் 2023-க்குள் முடிவடையும்.
இப்பால வேலை முடிவடைந்தவுடன், மதுரை நகரின் கிழக்குப் பகுதியில் (கோரிப்பாளையம்) இருந்து மேற்குப் பகுதிக்கு (ஆரப்பாளையம், சமயநல்லூர், அலங்காநல்லூர்) வைகை வடகரை சாலை வழியாக நகரப் போக்குவரத்து இயக்கத்தைத் திருப்பிவிடவும், போக்குவரத்து நகருக்குள் நெரிசலைத் தவிர்க்கவும், விரைவான மற்றும் தடையற்ற போக்குவதத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர். சிம்ரன் ஜீத் சிங், மதுரைவடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி மற்றும் பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment