தொடர்ந்து, கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குதல், தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு பண்டகசாலைகள் என, பொதுமக்கள் நலன் சார்ந்து மிக நேரடியாக செயல்படக்கூடிய துறையாகும். தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில், 4 ஆயிரத்து 453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடங்கும். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிலைகளிலான வங்கிகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூபாய் 71 ஆயிரத்து 950 கோடி மதிப்பீட்டில் வைப்புத்தொகை ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மொத்தம் ரூபாய் 64 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 17 விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 17.43 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 13 ஆயிரத்து 443 கோடி மதிப்பீட்டில் வேளாண் கடனுதவிகளும் 1.59 இலட்சம் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூபாய் 1 ஆயிரத்து 72 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும் 2.86 லட்சம் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூபாய் 1 ஆயிர்த்து 339 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 35941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ,26018 முழுநேரக் கடைகளுகம், 9923 பகுதிநேரக் கடைகளும் அடங்கும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளை புனரமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 5784 நியாயவிலைக் கடைகளுக்கு, தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. நடப்பாண்டில், கூடுதலாக 5 ஆயிரம் நியாய விலைக்கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 நியாயவிலைக் கடைகளுக்கு, தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிதாக கட்டப்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளும் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில், கழிப்பறைகள் அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, நெல் கொள்முதல் செய்யும் பணிகளும் கூட்டுறவுத் துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 998 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு ரூபாய் 6793.56 கோடி மதிப்பீட்டில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு 4.15 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, டெல்டா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் அதிக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நியாயவிலைக் கடைகளில் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அரசின் கொள்கை ரீதியான அறிவிப்பு உள்ளது. இது தொடர்பாக, பணியாளர்களின் நலனை கருத்திற்கொண்டு நிர்வாக ரீதியான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. கூட்டுறவு வங்கிகளின் பரிவர்த்தனைகள், போன் பேங்கிங் போன்ற பரிவர்த்தனைகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் பல்நோக்கு சேவை மையங்களாக மேம்படுத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது, மத்தியான குருமூர்த்தி, (கூட்டுறவு சங்கங்கள்) பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை), மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜீவா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment