மொபைல்போன் தொழில்நுட்ப உலகில் நன்மைகளைத் தேர்ந்தெடுத்து தீமைகளை தவிர்ப்போம்.
பிரம்ம குமாரிகள் தியான மையம் நடத்திய டிஜிட்டல் நல்வாழ்வு கருத்தரங்கை துவக்கி வைத்து வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர் உரை. மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள பிரம்ம குமாரிகள் ராஜ யோக தியான மையத்தின் சார்பில் "டிஜிட்டல் நல்வாழ்வு" என்ற கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கை துவக்கி வைத்த வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசுகையில் ஒவ்வொரு தொழில்நுட்பமும் நன்மை, தீமை என்ற இரண்டு பக்கங்களை கொண்டது என்றும், அவற்றில் நன்மையை தேர்ந்தெடுத்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், மொபைல் போன் தொழில்நுட்பம், பண பரிமாற்றம் செய்யவும், உலகில் எந்த மூலையில் இருப்பவரையும் உடனடியாக தொடர்பு கொள்ளவும், சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்கள், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும், வீடியோ கால் மூலம் முகத்தை பார்த்து பேசவும், ஆன்லைன் மூலம் பல்வேறு படிப்புகள், பயிற்சிகளை பெறவும், புத்தகங்கள், செய்தித்தாள்களை வாசிக்கவும் பயன்படுத்த முடிகிறது போன்ற நன்மைகள் இருந்தாலும் தொடர்ந்து மொபைல் ஃபோனை பயன்படுத்துவதால் பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகவும் கண்கள், மூளை, முதுகு மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதற்கும், சமூக உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தவும், தவறான தகவல்களை பரப்புவதால் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படவும், சைபர் குற்றங்கள் பெருகவும் காரணமாக அமைகின்றது. எனவே ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் உள்ள நன்மைகளை எடுத்துக் கொண்டு நமது வாழ்க்கை முறையில் எவ்வித சிக்கலும் ஏற்படாதவாறு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதன்பின் பேசிய இம்மையத்தின் பொறுப்பாளர் பிரம்மகுமாரி ராணி "டிஜிட்டல் நலவாழ்வு" பற்றிய விரிவான விளக்கத்தினை கம்ப்யூட்டர் பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார். இக்கருத்தரங்கில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர். கரு. முருகேசன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரம்ம குமாரி ராணி தலைமையில் பிரம்ம குமாரிகள் கீதா, லட்சுமி, சகோதரர்கள் முரளி, ஹரிஹரன் ஆகியோர் செய்தனர்.
No comments:
Post a Comment