மதுரை மத்திய சிறையில் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத்தேர்வு எழுதிய 107 கைதிகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 8 April 2024

மதுரை மத்திய சிறையில் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத்தேர்வு எழுதிய 107 கைதிகள்.


பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்ககத்தின் கீழ், சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத்திட்டம் 2023-24 கல்வி ஆண்டில், மதுரை மத்திய சிறையில் 5 தன்னார்வலர்களைக் கொண்டு, 77 ஆண் மற்றும் 30 பெண் சிறைவாசிகளுக்கு மொத்தமாக 107 பயனாளிகளுக்கு, சிறை வளாகத்தில் உள்ள 5 எழுத்தறிவு மையங்களில், 19 செப்டம்பர் 2023 முதல் ஆறு மாதங்களுக்கு, எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இதன் தொடச்சியாக இத்திட்டத்தில் பயின்ற 107 பயனாளிகளுக்கு, அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத்தேர்வு, இன்று 23.03.2024 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மதுரை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது. சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஸ் குமார் தேர்வின் பொறுப்பு அலுவலராகவும், ஜெய்லர் கண்ணன் தேர்வு மையத்தின் முதன்மைக்கண்காணிப்பாளராகவும், தன்னார்வலர்கள் அறைக் கண்காணிப்பாளர்களாகவும் செயல்பட்டனர். 


காவல்துறைத் துணைத்தலைவர் பழனி அவர்கள் வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள். தேர்விற்கான ஆயத்தப்பணிகளை சிறைத்துறை கண்காணிப்பாளர் அவர்களின் உதவியுடன் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், மதுரை மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்..


பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் நாகராஜ முருகன், மதுரை மத்திய சிறையில் நடைபெற்ற சிறப்பு எழுத்தறிவுத்திட்ட தேர்வு மையங்களை பார்வையிட்டார். பார்வையின்போது மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா. உதவித்திட்ட அலுவலர் கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.


திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்களின்படி விடைத்தாள்கள் திருத்தும்பணி முடிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெறும் பயனாளிகளுக்கு பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதே தேர்வினை தமிழகத்தின் எட்டு மத்திய சிறை மற்றும் ஒரு மாவட்ட சிறையில் உள்ள 1249 பயனாளிகள் எழுதினர். இத்திட்டம் தமிழ்நாடு அரசின் 100% நிதிப்பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad