அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 9 January 2024

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.


மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து  அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில், மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற  அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து  அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம்   நடைபெற்றது.


இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தெரிவித்ததாவது:- தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இப்போட்டிகளை, எப்போதும் போல மிகச்சிறப்புடன் நடத்திடும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படும். 


மருத்துவ பரிசோதனை சான்று  உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையே சமர்ப்பித்து விண்ணப்பிக்கும்  காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில்  தேவைக்கேற்ப பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படுவதை காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு சார்ந்த அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் உறுதி செய்திட வேண்டும். 


ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது, எதிர்பாராத விதமாக பொதுமக்களுக்கோ, மாடுபிடி வீரருக்கோ, காளைகளுக்கோ காயம் ஏதும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கிட போதிய மருத்துவர்கள் குழுக்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.  இதுதவிர, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களில் போதிய அளவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மதுரை மாவட்டத்தில், நடைபெறும் இந்த உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எப்போதும் போல மிகச்சிறப்பாக நடத்திடும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.


இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி டாக்டர்.மோனிகா ராணா, மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன்,  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன்,  மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் மற்றும் கிராமப் பொதுமக்கள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad