மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில், உள் நோயாளிகள் மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு மருத்துவ சேவை, தாய்சேய் நலம், தொற்று நோய் தடுப்பு பணி, மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சியில் 1991 ஆம் ஆண்டு முதல் வில்லாபுரத்தில், மாநகராட்சியின் சார்பில் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இந்த மையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியின் பழைய கட்டிடயத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு என, தனி அறை, பிரசவ அறை, மருத்துவ கண்காணிப்பு அறை உள்ளிட்ட வசதிகள் ஏதும் ஏற்படுத்தப்படாமல் இருந்தது.


கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் நிதியின் கீழ் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால், கடந்த 23.06.2023 அன்று புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் கட்டிடங்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வகங்கள் திறந்து வைக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.86 வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு பிரசவ அறை, கர்ப்பிணி தாய்மார்கள், பிரசவித்த தாய்மார்கள், பேறுகால பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு அறைகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 31 ஆண்டுகளுக்கு பிறகு இம்மருத்துவமனையில் முதல் பிரசவம் நடைபெற்றது, இதுவே முதல் முறையாகும். வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவை அளித்து முதல் பிரசவத்தை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொண்ட மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், மேயர், ஆணையாளர் ஆகியோர் தெரிவித்து கொண்டார்கள்.
இந்த மருத்துவமனையின் மூலம் வில்லாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மருத்துவ சேவைகளை பெற்று வருகிறார்கள். இம்மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்கள், நகர சுகாதார செவிலியர்கள் மூலம் தினந்தோறும் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறப்பான மருத்துவ சேவையை அடைந்து குழந்தை பெற்ற தாய்மார்க்கு மேயர், ஆணையாளர் ஆகியோர் தமிழக அரசால் வழங்கப்படும் தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார்கள். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்த உள்ள முதியோர்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்கள். இந்த மையத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணித்து சிறந்த மருத்துவ சேவை அளித்திட வேண்டும் என, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், நகர் நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் திருமலை, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர் நல அலுவலர் மரு.ஸ்ரீ.கோதை, மாமன்ற உறுப்பினர் பூமா, மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment