மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள எஸ்.பாப்பிநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு திடல் அமைக்கப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.

அதன்பின் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. பல காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டி சென்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, சைக்கிள், மிக்சி, மின்விசிறி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment