மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம் அதிகமாக விளைகிறது. எனவே வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:- பேரையூர் தாலுகாவில் தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி சந்தையூர், சாப்டூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை பழம் சாகுபடி ஆகி வருகிறது.

இங்கு விளையும் எலுமிச்சை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பேரையூரில் நடப்பாண்டு எலுமிச்சை விளைச்சல் நன்றாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120-க்கு கொள்முதல் ஆகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் கண்மாய், கிணறுகளில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் உள்ளது.எனவே நாங்கள் எதிர்பார்த்ததை போல, எலுமிச்சம்பழ விளைச்சல் நன்றாக அமைந்து உள்ளது.
எங்களிடம் வியாபாரிகள் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்கின்றனர். மாட்டுத்தாவணி பரவை உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சம்பழ விளைச்சலும், விலையும் அமோகமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு வெயில் உக்கிரமாக இருப்பதால் தேவையும் சற்று அதிகமாக இருக்கும். எனவே எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment